top of page
  • தாயகமாம் தமிழகத்திலிருந்து வேலை தேடி பஹ்ரைன் வரும் இஸ்லாமிய மக்களுக்கு தங்களின் ஒய்வு நேரங்களை பயனுள்ள வகையில் ஆக்கிக் கொள்வதற்கு எந்த ஏற்பாடும் இல்லாத காலகட்டம். பணிசெய்வதற்கான களம் தயாராக இருந்தது. இந்த வெற்றிடத்தை நிரப்பி களம் காண ஒருசில சகோதரர்கள் ஒன்றிணைந்தனர். அப்போது வருடம் 1999. குர்ஆன் விளக்கவுரை, ஹதீஸ் விளக்கவுரை என சென்று கொண்டிருந்த சந்திப்பும், வாராந்திர அமர்தலும் 2000-ம் ஆண்டின் துவக்கத்திலிருந்து தாருல் ஈமான் - தமிழ் இஸ்லாமிக் சென்டர் எனும் பெயர்கொண்டு களம் கண்டது. அல்ஹம்துலில்லாஹ்!

  • இறையருளால் இந்த கால் நூற்றாண்டு கால பயணத்தில் பல நூற்றுக்கணக்கான தமிழ் முஸ்லிம்களின் தேடலுக்குப் புகலிடமாய் மாறியது தமிழ் இஸ்லாமிக் சென்டர். மக்களை குர்ஆனோடு தொடர்புபடுத்துவதே எமது முதற்பணியாக இருந்தது. குர்ஆனையும் ஹதீஸையும் சரியாக விளங்கி, அதன் மீது முழு திருப்தியோடு ஈமான் கொண்டு, அதற்கிசைவான நற்செயல்கள் புரிவதற்கான பயிற்சியையும், களத்தையும் அமைத்து தருகிறது தமிழ் இஸ்லாமிக் சென்டர்.

     

    ஒவ்வொரு மனிதரும் தம்மை பண்படுத்திக்கொள்ள வாசிப்பே வழியாகும் என்பதை வலியுறுத்தி அதனை நிறுவியுள்ளது தமிழ் இஸ்லாமிக் சென்டர். அறிவின் எல்லை விரிய ஆழமான வாசிப்பே முதற்படியாகும். இவ்வாறு பயிற்சிபெற்ற பல நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும், இளைஞர்களும் இன்று சமூக தளங்களில் பல்வேறு நற்பணிகள் புரிந்து வருகின்றனர். மக்களுக்கு மத்தியில் அன்பையும், நல்லிணக்கத்தையும் விதைத்து வருகின்றனர்.

  • முத்துத் தீவாம் பஹ்ரைனில் ஏறத்தாழ ஐம்பதாயிரம் தமிழ் சமூகத்தினர் வசிக்கின்றனர். இதில் 35000 பேர் முஸ்லிமல்லாத சமூகங்களை சார்ந்தவர்கள். இவர்களுக்கும் இஸ்லாத்தின் செய்தியை கொண்டு சேர்க்கும் பணியை Discover Islam Society-எனும் தாஃவா அமைப்போடு இணைந்து செயற்படுத்தி வருகிறோம். இதன் மூலம் பல நூற்றுக்கணக்கானோர் இஸ்லாத்தை குறித்த தெளிவை பெற்றுள்ளனர்.

    தற்போது பஹ்ரைனில் இருபதுக்கும் அதிகமான தமிழ் அமைப்புகள் செயற்பட்டு வருகின்றன. அனைத்து அமைப்புகளோடும் நல்லுறவையும், இணக்கத்தையும் பேணிவருவது தமிழ் இஸ்லாமிக் சென்டரின் சிறப்பம்சமாகும்.

  • இளைஞர்களை நெறிப்படுத்த 'சாலிடாரிட்டி இளைஞர் அமைப்பும்' மாணவர்களை நெறிப்படுத்த 'இளம்பிறை' அமைப்பும் உருவாக்கப்பட்டு செயற்பட்டு வருகிறது.

  • 'லாஹிலாஹா இல்லல்லாஹ், முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்' என்ற அழகிய கலிமாவை கொள்கையாக கொண்டு, இறைதிருப்தி, மறுமை வெற்றி என்பதை மட்டுமே இலக்காக்கி, அல்குர்ஆனையும், அண்ணல் நபிகளார் (ஸல்) வாழ்வியலையும் வழிமுறையாகக் கொண்டு சீராக செயற்படும் உன்னத அமைப்பாக தமிழ் இஸ்லாமிக் சென்டர் இயங்குகிறது.

    அல்ஹம்துலில்லாஹ்!

bottom of page