இளம்பிறை மூன்றாம் ஆண்டு விழா
- Jan 8, 2024
- 2 min read
நாள்: 5-ஜனவரி.2024,
நேரம்: மாலை 05:30 மணி
இடம் : அல்இஸ்லாஹ்,ஹால், முஹர்ரக்
பஹ்ரைன்

இறையருளால் இளம்பிறை அமைப்பின் மூன்றாம் ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. குர்ஆன் மனனம் உட்பட பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தமிழகத்திலிருந்து ஜனாப்.V.S. முஹம்மத் அமீன் அவர்கள் (பொறுப்பாசிரியர் சமரசம் இதழ் ) கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.
இந்நிகழ்ச்சிக்கு விருந்தினர்களாக உருது ஹல்காவிருந்து சகோ.அஷ்ரப் ஷரீப், சகோ. ஆமிர் ஜாஹித், சகோ.நபீல் அஹமது, மற்றும் ரியாத்திலிருந்து சகோ.அப்துல் காதர் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.
மேலும், டிஸ்கவர் இஸ்லாம் சொசைட்டியின் தாஃவா பொறுப்பாளர் ஜனாப்.சையத் தாஹிர் , இலங்கை ஜமாஅத்திலிருந்து டாக்டர். கலீல் ரஹ்மான், கேரள ஜமாஅத்திலிருந்து சகோதரர். ஷாநாஸ் மற்றும் உம்மு அரக்கா குர்ஆன் சென்டரின் மதிப்பிற்குரிய ஆசிரியைகள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு சேர்த்தனர். அல்ஹம்துலில்லாஹ்!
ஜமாஅத்தின் சகோதர, சகோதரிகள் மற்றும் மாணவமணிகளின் பெற்றோர்கள் திரளாக கலந்துகொண்டு விழாவிற்கு மெருகூட்டினர். அல்ஹம்துலில்லாஹ்!
ஜமாஅத்தின் பொறுப்பாளர் சகோ. அப்துர் ரவூஃப் அவர்கள் தலைமையேற்று துவக்கவுரை ஆற்றினார்.
சிறப்புரையாற்றிய சகோ. அமீன் அவர்கள், குழந்தைகளை உற்சாகப்படுத்துங்கள், உற்சாகமாக வைத்துக்கொள்ளுங்கள்!
அவர்கள் விளையாடட்டும், இன்னும் அவர்களோடு விளையாடவும் செய்யுங்கள்!
உங்கள் கைபேசிக்கு செலவிடும் நேரத்தை காட்டிலும் அதிகமாக அவர்களுக்கு நேரத்தை ஒதுக்கிடுங்கள்!
உங்களது ஸ்பரிசத்தை(தொடுதலை) உங்களது குழந்தைகள் உணரட்டும் !
பயிற்றுவிக்கும் ஆசிரியைகளே…நீங்கள்தான் முன்மாதிரி!
எனவே, பாடம் நடத்துவதோடு அவர்களுக்கான பாடமாக நீங்கள் இருங்கள்!
நேரம் தவறாமையும், வாக்குறுதி பேணுவதும், ஒழுக்கம் சார்ந்தவைதான் என்பதை கற்றுக்கொடுங்கள்!
வரலாற்று திரிபுகளையெல்லாம் இஸ்லாமிய ஆசிரியைகளான நீங்கள்தான் அம்பலப்படுத்திட வேண்டும், உங்களது மாணவ மணிகளுக்கு!
“இளம்பிறையே…..! கவலைகொள்ளாதே, உன்னுள்தான் பூரண சந்திரன் புதைந்துள்ளது” என முத்தாய்ப்பாய் கூறி உரையை நிறைவு செய்தார்!
அதன்பின், இளம்பிறையின் இளவல்கள் பல்வேறு குழுக்களாக மேடையை அலங்கரிக்க துவங்கினர்!
இன்ஷாஅல்லாஹ், சுவனத்தில் மட்டுமல்ல , இப்போதும் நாங்கள் அழகிய மலர்கள்தாம் என்றார்போல்….
அழகிய ஆடையணிந்து சமூக சீர்திருத்த கருத்துகளை கலைவடிவில் வெளிப்படுத்தி விழிப்புணர்வூட்டினர்.
அடுத்தாற்போல் வந்த ஹிஜாபிய மாணவிகள், ஹிஜாப் எங்கள் உரிமை, எங்கள் மத விழுமியம், எங்கள் கடமை!
அதை அகற்றிட முனைந்தால் அஞ்சிடுவோம், அவிழ்த்திடுவோம் என்றா நினைத்தீர்…!
இறைவன் எமக்கு வழங்கிய கண்ணியத்தையும், உரிமையையும் எவருக்காகவும் விட்டுத்தரத் துணியோம் என போர் பரணி பாடினர் !
ஃபலஸ்தீனத்தில் அரங்கேற்றப்படும் இனப்படுகொலைகளை நிழற்படமாக , தத்ரூபமாக காட்சிப்படுத்தி, கொலைக் களங்களை கண்முன் கொண்டுவந்து கண்கலங்க வைத்தனர் எமது மாணவ மணிகள்!
இறுதி அணிவகுப்பாக மேடையேறிய மாணவர்கள், கைபேசியின் கட்டற்ற பயன்பாட்டால் இன்று சிறார்களை, இளம்தலைமுறையினரை எவ்வாறு உடல் ரீதியக, மன ரீதியாக பாதித்து சீரழித்து வருகிறது என்பதை தங்களின் மெளன நடிப்பால் (MIME) காட்சிபடுத்தி விழிப்புணர்வூட்டினர்!
விழாவின் நிறைவாக, இளம்பிறையின் பொறுப்பாளர், சகோதரி பௌசியா ஆண்டறிக்கையை சமர்பித்து,
இளம்பிறையின் பணிகள் சீராக நடைபெற நிர்வாகத்தின் ஒத்துழைப்பும்,
ஆசிரியைகளின் அர்ப்பணிப்பும் சிறப்பாகவும் உத்வேகம் அளிப்பதாகவும் குறிப்பிட்டார்.
இளம்பிறையின் அனைத்து ஆசிரியைகளுக்கும் ஜமாஅத்தின் பெண்கள் வட்ட பொறுப்பாளர் சகோதரி. செளதாகனி அவர்கள் சான்றிதழும், நினைவுப் பரிசும் வழங்கி கெளரவித்தார்.
இறுதியாக, சகோதரி. அனீஸ் அவர்களின் நன்றியுரை மற்றும் நம் மாணவி சஃபியாவின் துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது!
எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!
சகோதரர். அன்வர் சாதத் அவர்களின் வழிகாட்டலில் சகோதரர். ஹக்கீம் அவர்களின் தலைமையிலான குழுவினர் அனைத்து ஏற்பாடுகளையும் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்!
எல்லாம் வல்ல ரஹ்மான் எமது பணிகளை ஏற்றுக்கொள்வானாக!
இம்மை மறுமையின் நன்மைகளை நம் அனைவருக்கும் வழங்கி அருள் புரிவானாக! ஆமீன்!
-நிஜார் முஹம்மது
Comments