வெற்றிக்கு வித்தாகும் ரமழான்
- Feb 26
- 2 min read
நாள்: 21 பிப்ரவரி 2025
இடம்: அல்-இஸ்லாஹ் சொசைட்டி முஹர்ரக்
ரமழானை வரவேற்கும் விதமாக தாருல் ஈமான் தமிழ் இஸ்லாமிக் சென்டர் சார்பாக வெற்றிக்கு வித்தாகும் ரமழான் எனும் தலைப்பில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது
சொற்பொழிவாற்ற இலங்கையிலிருந்து ஜாமிய்யா நளீமியாவின் இயக்குனர் அஷ்ஷெய்க் A.C அகார் முஹம்மது நளீமி அவர்கள் வருகை புரிந்து சொற்பொழிவாற்றினார்கள்.

நிகழ்ச்சியின் துவக்கமாக
இளவல் முஹம்மதுவின் கிராஅத் ஓதப்பட்டது,
அதனைத் தொடர்ந்து...
துவக்க உரையாற்றிய சகோ அப்துர் ரவூப்,
"தனது வாழ்க்கையை குர்ஆன் அடிப்படையில் அமைத்துக்கொண்ட தனிமனிதர்கள், சமூகங்கள் மட்டுமே வெற்றி பெற்றிருக்கின்றன, ஆனால் அதில் இரண்டு நிபந்தனைகள் இருக்கின்றன,

ஒன்று இக்லாஸ் எனும் உளத்தூய்மை இன்னொன்று, இறையச்சம்
இவை இரண்டுடன் கூடிய குர்ஆனிய வாழ்வு வெற்றியை ஈட்டித் தந்திருக்கின்றன. அத்தகைய இறையச்சத்தை பெற்றுக்கொள்ள இறைவன் தந்த அருட்கொடைதான் ரமழான் நோன்பு
இந்த நோன்பு காலம் உண்டு களிப்பதற்கும், உறங்கி களிப்பதற்கான மாதம் அல்ல, மன்னிப்பை, சுவனத்தை பெற்றுக்கொள்ளவும் நரகநெருப்பிலிருந்து காத்துக்கொள்ளவும் அருளப்பட்ட மாதம் அதனால்தான் ரமழான் வெற்றிக்கு வித்தான மாதம்
அதற்கான சாட்சி சரித்திரம் காபாவை கைப்பற்றியது,
பைத்துல் முகத்தஸை கைப்பற்றியது ரோம, பாரசீகத்தை கைப்பற்றியது என்று கூறினார்.
சிறப்புரையாற்றிய, அஷ்ஷெய்க் அகார் முஹம்மத் நளீமி அவர்கள்:
இருசாரார் இருக்கிறார்கள், ஒருசாரார், நுகர்வு வாழ்க்கையை வாழ்கிறார்கள், இவர்கள் வெறுமனே உண்டு களித்து, தனது ஆயூளை நஷ்டப்படுத்திக்கொள்கிறார்கள்.
மறுசாரார், நற்செயல், நற்காரியங்கள் மூலம் தங்கள் ஆயுளை, மறுமை லாபத்திற்கான முதலீடாக்கி கொள்கிறார்கள்.
அந்த வகையில் இதுபோன்ற தாவா பணிகள் மூலம் இந்த இயக்க சகோதரர்கள் தங்கள் ஆயுளை முதலீடாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

ரமழான் மாதம் நன்மைகளை அறுவடைசெய்யும் பருவகாலம்,
மூஃமின்களது மறுமை வெற்றிக்கான பருவகாலம், அத்தகைய பருவகாலத்தை ஒருகணம்கூட வீணாக்காது பயன்படுத்திகொள்ள உறுதிபூணவேண்டும்.
ஏனெனில், ஒரு சுன்னத்தை ரமழானில் நிறைவேற்றும்போது, அது ஒரு பர்ளுக்கு ஒப்பாகிவிடுகிறது.
ஒரு பர்ளு ரமழானில் நிறைவேற்றும்போது, அது 70 பர்ளுக்கான நன்மையாகிவிடுகிறது.
ரமழானில்தான் குர்ஆன் இறக்கியருளப்பட்டது எனவே குர்ஆனிய மாதமான ரமழானில் குர்ஆனை இரவு பகல் பாராது பலமுறை ஓதி ஹதம்செய்ய உறுதிபூண வேண்டும்.
குர்ஆன் ஓதுவதில் அவசரம் காட்டக்கூடாது என்பதெல்லாம் சராசரி நாட்களில்தான், இது பருவக்காலம் எனவே எவ்வளவு முடியுமோ, அவ்வளவுக்கு அதிகமாக ஓதிடவேண்டும்.
குர்ஆனை வெருமனமே கிராஅத் செய்வதல்ல (ஓதுவதல்ல), திலாவா செய்வோம், அதாவது அதன் ஆயத்துகளை (அத்தாட்சிகளை) வழிகாட்டுதலாக ஏற்று வாழ்ந்திடுவோம், அதனோடு பயணிப்போம்.
இந்த ரமழானில் புதியதாய் பிறந்த மனிதனைப்போல், புதிய வாழ்க்கை, புதிய பயணம் பெற
நற்செயல்களை அதிகப்படுத்திட... பாவமானதை விட்டும் விலகிட...
குடும்பத்தார், சுற்றத்தாரின் இஸ்லாமிய ஆன்மீக வாழ்வு மேம்பாட்டுக்காக உழைத்திட...
சும்மா பேச்சுக்களை சந்திப்புகளை (Socializing) தவிர்க்க...
பாவமான பேச்சுக்களைவிட்டும் விலகிட...
நிய்யத் செய்திடுவோம், திடசங்கற்பம் பூணுவோம்.
நல்லொழுக்கத்தின் அடையாளம், Label ஹிஜாப் என்றால்,
பசித்திருப்பதும் தாகித்திருப்பதும் நோன்பின் அடையாளங்கள் மட்டுமே ஆனால் அது மட்டுமே நோன்பல்ல
பொய், அவதூறு, புறம்பேசுவதிலிருந்து விலகியிருப்பது நோன்பாகும்
"ரமழானை பெற்றும் பாவமன்னிப்பை, பெறாதவர்களுக்கு நாசம் உண்டாகும்" என எச்சரிக்கிறது ஹதீஸ் எனவே அதிகமதிகம் தௌபா செய்வோம்
நோன்பைப் பற்றிய சட்டதிட்டங்களை முன்கூட்டியே அறிந்துகொள்ளுங்கள்
ஐவேளை தொழுகையை பள்ளிவாசலில், ஜமாஅத்துடன் தொழுவோம்
சுன்னத்தான தொழுகைகளை, ஜகாஅத்தை நிறைவேற்றுவோம்
சதகாவை அதிகப்படுத்த வேண்டிய மாதம் இது, பிற மதத்தவருக்கும் சதகாவை கண்டிப்பாக விரிவுபடுத்த வேண்டும்
சதகா கொடுக்க கொடுக்க செல்வம் கூடும்
கொடுக்காமல் இருந்தால் செல்வத்தில் பரக்கத், அதன் தரம் குறையும் என்பதை மனதில் வைப்போம்.
தொழாதவர்களை தொழவும் தொழுபவர்களை ஜமாஅத்த்துடன் தொழ
ஏவிடுவோம்.
கைபேசியை விட்டும் விலகுங்கள், உம்ராவை மேற்கொள்ளுங்கள்.
யாரை குறித்தும் காதியாக (தீர்ப்பாளனாக) இருக்காதீர்கள், தாயியாக இருங்கள்
என்றுகூறி நிறைவுசெய்தார்.
நிறைவுரையாற்றிய சகோதரர் அன்வர் சதாத் அவர்கள் அஷ்ஷெய்க் பற்றியும், இஸ்லாத்தின் மேன்மைக்கு அவர் செய்த தொண்டுகளைப் பற்றியும் எடுத்துரைத்தார்

இறுதியாக, அஷ்ஷெய்க் அவர்களுக்கு தாருல் ஈமான் TIC சார்பாக நினைவுப் பரிசு வழங்கப்பட்டு, நிகழ்ச்சி நிறைவு செய்யப்பட்டது
நிகழ்ச்சிக்கு 500-க்கும் அதிகமானோர் வருகை தந்து அரங்கை சிறப்பித்தனர்

நிகழ்ச்சிகளை சகோதரர் அம்ஜத்கான் மிக அழகாக தொகுத்து வழங்கினார்.
அல்ஹம்துலில்லாஹ்...!
இந்நிகழ்ச்சிக்காக உடல் உழைப்பை, பொருளாதாரத்தை, நேரத்தை வழங்கிய சகோதரர்களுக்கு இறைவன்அருள்புரியட்டும், ஆமீன்
தகவல்
நிஜார் முஹம்மது
ஊடகப் பிரிவு
தாருல் ஈமான்- தமிழ் இஸ்லாமிக் சென்டர் பஹ்ரைன்
Comments